உத்தரப்பிரதேசம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஜுக்லிகலா கிராமத்தில், 25 வயதான ஹரேந்திரா வர்மா என்பவர், தனது மைத்துனரின் திருமணத்துக்காக மாமியார் வீட்டிற்கு வந்திருந்தார். திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர், அவரது மனைவி உமா தேவி மற்றும் அவரது காதலன் ஜிதேந்திரா வர்மா ஆகியோரால் ஹரேந்திரா திட்டமிட்டு கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலையுடன் தொடர்புடைய ஏழு பேர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரேந்திராவின் மனைவி உமா தேவி மற்றும் காதலன் ஜிதேந்திரா முக்கிய குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஹரேந்திரா, கார்குபூர் காவல் நிலையம் அருகிலுள்ள தேவர்ஹானாவைச் சேர்ந்தவர். ஏப்ரல் 30 அன்று மைத்துனரின் திருமண விழாவுக்காக பல்ராம்பூருக்கு வந்திருந்த அவர், திருமணம் முடிந்ததும் தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளார். அந்த நேரத்தில், ஜிதேந்திரா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, ஹரேந்திராவை கழுத்தறுத்து கொன்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி பல சாட்சியங்களை பெற்று குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஹரேந்திராவும், உமா தேவியும், ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் திருமணத்திற்கு முன்பே கடந்த 6 ஆண்டுகளாக உமா மற்றும் ஜிதேந்திரா காதல் உறவில் இருந்தனர். இந்த விவகாரத்தை ஹரேந்திரா தெரிந்துகொண்டதாலேயே, கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, உமா தனது தாயார் வீட்டில் தனியாக வசித்து வந்தார். பின்னர், ஹரேந்திராவை திருமண விழாவுக்குப் பிறகு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளனர்.

இந்த கொலைக்காக உமா தேவி, ஜிதேந்திரா வர்மா, முகேஷ் குமார், சச்சின் யாதவ், அகிலேஷ் யாதவ், சந்தோஷ், முகேஷ் சாஹு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, இரத்தக்கறை படிந்த உடைகள், ஆறு மொபைல் போன்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.