சேலம் மாவட்டம் கோட்ட கவுண்டம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் டி.எம். செல்வ கணபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது வயல்வெளியில் சுற்றித்திரிந்த பாம்பு ஒன்றினை வாலிபர் ஒருவர் பிடித்து தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த பகுதியில் சுற்றித்திரிந்தார். இதைப்பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில் பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் அந்த வாலிபரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் அந்த வாலிபர் அங்கிருந்து செல்லவில்லை. பிரச்சாரம் முடிந்து டி.எம் செல்வகணபதி அங்கிருந்து சென்ற பிறகுதான் வாலிபரும் அங்கிருந்து கிளம்பினார்.‌ இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மாவட்ட வன அலுவலர் அந்த வாலிபரை கைது செய்ய உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் கருப்பூரை சேர்ந்தவர் என்பதும் அவருடைய பெயர் அரவிந்த் குமார் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அரவிந்த் குமார் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.