முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தவெக-வில் இணைந்திருக்கும் நிலையில், அவரது அண்ணன் மகன் செல்வம்  மீண்டும் அதிமுகவில் இணைந்திருப்பது ஈரோடு மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தைச் சேர்ந்த செல்வம், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் (இபிஎஸ்) இல்லத்தில் அவரைச் சந்தித்து, அவர் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு செங்கோட்டையனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவர் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்திருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பியுள்ளார்.

கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செல்வம், தனது சித்தப்பாவான செங்கோட்டையன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “அனுபவம் வாய்ந்த திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்களுடைய வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் மிக முக்கியமான காரணமாக எனது தந்தை  அவர்கள் செயல்பட்டு வந்தார்கள்.

ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டு, இன்றைக்குத் தவெக-வில் அடைக்கலம் ஆகி, எடப்பாடியார் மீது குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்,” என்று செல்வம் விமர்சித்தார். மேலும், “எங்களது உழைப்பின் காரணமாகத்தான் செங்கோட்டையன் கடந்த 2006 மற்றும் 2014 தேர்தல்களில் வெற்றி பெற்றார். நாங்கள் இல்லை என்றால் நிச்சயமாக அவர் தோற்கடிக்கப்பட்டிருப்பார்,” என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.