மதுரையில் மதநல்லிணக்கம் மக்கள் கூட்டமைப்பின் சார்பில் மத நல்லிணக்க போராட்டம் நடத்த அனுமதி கேட்ட நிலையில் அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து விட்டனர். இதற்கு திருமா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதாவது மதநல்லிணக்கத்தை வலியுறுத்தக்கூடிய முதல்வர் ஆட்சியிலிருந்தும் எதிர்க்கட்சிகளின் மத நல்லிணக்க போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது குழப்பமாக இருப்பதாக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மத நல்லிணக்க போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததன் மூலம் திமுக அரசின் சாயம் வெளுத்து விட்டது என்று கூறிய அவர் அண்ணன் திருமாவளவன் கூட இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதாக கூறினார் .

அதன் பிறகு மத நல்லிணக்க போராட்டத்திற்கு மட்டும் அனுமதி மறுப்பார்கள் ஆனால் பிளவுவாத அரசியல் செய்பவர்களுக்கு மட்டும் அனைத்து அனுமதியும் வழங்கப்படும். வாய் வித்தை காட்டும் இந்த தமிழ்நாடு அரசால் மதச்சார்பின்மை என்று கபட நாடகமாடும் இந்த திமுக அரசால் பாஜக மீதான பாசத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. திமுகவும் பாஜகவும் மறைமுகமாக உறவோடு இருப்பது இதன் மூலம் வெளிப்படுகிறது. மேலும் திமுகவின் சாயம் வெளுத்து வருவதை கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் உணர்ந்து வருகிறார்கள். 2026 ஆம் ஆண்டு தேர்தலின் மூலம் ஒரு நல்ல அரசு எங்கள் தலைவரின் தலைமையின் மூலம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.