தமிழக அரசியல் களத்தில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (தவெக), எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் முற்றி வரும் நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அதிரடியாக நுழைந்துள்ளது. தவெக அரசுக்கு ஆதரவாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

​சமீபத்தில் தவெக ஆட்சியை விமர்சித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த ஆட்சி விரைவில் கலைந்துவிடும் என்கிற தொனியில் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசியுள்ள சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டப்படி அமைந்துள்ள தவெக ஆட்சி முழுமையாகத் தொடர வேண்டும் என்று ஒரு எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் சொல்ல வேண்டுமே தவிர, ஆட்சி கலைந்துவிடும் என்று சொல்வது அவருடைய அரசியல் உயரத்திற்கு உகந்ததல்ல” என்று மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

தவெக அரசை முடக்க நினைக்கும் திமுகவின் தற்போதைய அரசியல் நகர்வுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருப்பது, தமிழக அரசியல் கூட்டணியில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.