
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்றார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் போது அமைச்சர்களை கை நீட்டி பேசி வேல்முருகன் சர்ச்சையில் சிக்கினார். சட்டசபையில் வேல்முருகன் நடந்து கொண்ட விதத்தை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கூட அவருக்கு கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் சபாநாயகர் இந்த ஒரு முறை மட்டும் வேல்முருகனுக்கு மன்னிப்பு வழங்குவதாகவும் மீண்டும் இது போன்று நடந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். அமைச்சர் சேகர்பாபு மற்றும் வேல்முருகன் இடையே கூட மோதல் போக்கு நிலவுவதாக கூறப்பட்டது.
இதன் காரணமாக தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்குமா என்று கேள்வி எழுந்த நிலையில் இது தொடர்பாக நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியில் தான் நாங்கள் நீடிக்கிறோம். நான் சட்டசபையில் பேசியது திமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தால் முதல்வர் ஸ்டாலின் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் .சட்டசபை தேர்தல் வரும் போது தான் கட்சி நிர்வாகிகளுடன் கூடி பேசி கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும். அதுவரை திமுக கூட்டணியில்தான் தொடர்வோம் என்றார். தேர்தல் நேரத்தில் முடிவு மாறலாம் என்கிற விதத்தில் வேல்முருகன் கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி நீடிக்குமா இல்லையா என்பது சற்று சந்தேகம் தான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.