தமிழகச் சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களின் நிறைவாக, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், திமுக மீது முன்வைத்த கடுமையான குற்றச்சாட்டுகளால் பேரவையில் பெரும் அமளியும் பரபரப்பும் ஏற்பட்டது.

பதிலுரையாற்றிப் பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்திருந்ததாகவும், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டினார். திமுகவினர் எந்த ஒரு செயலையும் குடும்பமாகவே மேற்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், தவறுகளையும் திட்டமிட்டுச் செய்யும் வகையில் ‘விஞ்ஞான ஊழலில்’ ஈடுபட்டதாக விமர்சித்தார்.

மேலும், கடந்த ஆட்சியில் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் 7.5% முதல் 10% வரை லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டிருப்பதாகவும், இதில் முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பிருப்பதாகவும் சாடினார். “தவறு நடக்கும் இடத்தில்தான் திமுக இருக்கும்; ஊழல் செய்தவர்கள்தான் ஆதாரங்களைக் கேட்பார்கள், செய்யாதவர்கள் அமைதி காப்பார்கள்” என்றும் அவர் கடுமையாகப் பேசினார்.

முதலமைச்சரின் பேச்சுக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து நின்று தொடர் முழக்கங்களை எழுப்பினர். குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க உடனடியாகப் பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினர். அதற்குச் சபாநாயகர் மறுப்பு தெரிவிக்கவே, அவை முன்னவர் செங்கோட்டையன் அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த திமுக எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரின் இருக்கையைச் சூழ்ந்துகொண்டு கூச்சலிட்டனர். சில உறுப்பினர்கள் பேரவையின் நடுவே தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் சிரித்தபடி பார்த்தவாறு இருந்தனர்.

சூழல் தீவிரமடைந்ததை அடுத்து, திமுகவினர் பேச அனுமதி அளிக்குமாறு சபாநாயகரிடம் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பின்போது, தனது மேஜைக்கு அருகே தரையில் அமர்ந்திருந்த மூத்த திமுக எம்.எல்.ஏ ஒருவரை, முதலமைச்சர் விஜய் அவரது கரங்களைப் பிடித்துத் தூக்கிவிட்டு கனிவோடு உதவினார்.