கோவை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடியின் அரசு என்பது ஏழை எளிய மக்களின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் அரசாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சாலைகள் அமைப்பதற்கு பல இடங்களில் அரசு இடம் தேர்வு  செய்து மத்திய அரசுக்கு வழங்காததால் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய பிரதமர் மோடியை வரவேண்டாம் என்று சொல்லும் தகுதி திமுக அரசுக்கு கிடையாது. திமுகவில் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை சிபிஎஸ்இ பள்ளியை நடத்துகிறார்கள். இந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு ஹிந்தி பாடத்தை கற்றுக் கொடுக்கிறார்கள். அப்படி எனில் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளையும் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு போடுமா.? தமிழ்நாட்டில் ஊழல் அற்ற ஆட்சி அமைய வேண்டும் என்றால் 2026 ஆம் ஆண்டு பாஜக தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூறினார்.

அதாவது முன்னதாக கெட் அவுட் மோடி என்று திமுகவினர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கெட் அவுட் ஸ்டாலின் என்று அண்ணாமலை பதிவிட்டார். மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. தமிழக அரசு இருமொழி கல்விக் கொள்கைதான் என்றென்றும் பின்பற்றப்படும் என்றும் ஹிந்தியை ஏற்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறது எனவும் உடனடியாக கல்விக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் பாஜகவினர் திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும் ஹிந்தி மொழி கற்பிக்கப்படுவதாகவும் அரசு பள்ளிகளில் மட்டும் இருமொழிக் கல்வியை கற்பிப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாத பிரதமருக்கு இங்கு வர தகுதி இல்லை என்று திமுகவினர் விமர்சிக்கும் நிலையில் அவரை இங்கு வர வேண்டாம் என்று சொல்லும் தகுதி திமுகவினருக்கு கிடையாது என்று பொன் ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் பாஜக மற்றும் திமுகவினர் இடையே கருத்து மோதல் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.