வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, தங்கள் கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒரே கொள்கை கொண்ட கட்சி என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். அதற்கு ஏன் தனித்தனி கட்சி? அனைத்தையும் ஒன்றிணைத்து விடலாமே. அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு. கூட்டணி வேறு. அதிகாரத்திற்காக கொள்கையை விட்டு கொடுக்கும் ஒரே கட்சி திமுக. நீட் ரகசியம் தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னார். இதுவரை அவராலேயே அந்த ரகசியத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்படும்.

திமுகவுக்கு என்ன கொள்கை இருக்கிறது? கடந்த 1999-ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது. முரசொலி மாறன் நினைவிழந்திருந்த சமயத்தில் ஓராண்டு காலம் அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். அந்த ஐந்து ஆண்டு காலம் முடிந்ததும் அப்படியே அந்தர் பல்டி அடித்து காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தார்கள். எனவே எங்களை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது. மத்திய அரசாங்கம் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறுவது சரி இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழி கொள்கைதான். அதில் மாற்றம் கிடையாது. தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களை பார்க்காதீர்கள். மக்களை பார்த்து நிதி ஒதுக்கங்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.