சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் உண்மை குற்றவாளிகள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி எதிர்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளது. அந்த வகையில் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்ற நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்ததோடு போராட்டத்தில் ஈடுபட்ட சீமானையும் கைது செய்தனர்.
இந்நிலையில் சீமானை கைது செய்த போலீஸ் இன்று மாலை விடுவித்தனர். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என்னுடைய கைது தேவையில்லாத ஒன்று. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த இடத்தில் பல்வேறு போராட்டங்களை நாங்கள் நடத்தியுள்ள நிலையில் இன்று மட்டும் கைது செய்தது எதற்காக.? நாங்கள் எதற்காக போராட்டம் நடத்தினோம் என்பதை கூட காவல்துறையினர் தெரிந்து கொள்ளாமல் கைது செய்துள்ளது மிகவும் கொடுமையானது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் எஃப் ஐ ஆர் வெளியானது எப்படி.? இந்த விஷயத்தில் பேசவும் போராடவும் அனுமதி மறுப்பது ஏன்.? நீங்கள் நடத்தினால் போராட்டம் அதுவே நாங்கள் நடத்தினால் நாடகமா.? அந்த சார் யார்.? எப்படி குற்றம் நடக்கும் இடங்களில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாமல் போகிறது.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது குரல் கொடுத்த நிலையில் இப்போது அவர்களுக்கு என்ன ஆனது.? நீங்களும் கேள்வி கேட்பதில்லை எங்களையும் கேள்வி கேட்பது கிடையாது. இதைப் பற்றி பேசக்கூடாது என்றால் அண்ணா பல்கலைக்கழக விஷயத்தை மூடி மறைக்க பார்க்கிறீர்கள். மேலும் இந்த விஷயத்தை மறக்கடிக்க வேண்டும் என்று சொல்வது ஏற்புடையது கிடையாது என்று கூறினார்.