திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவிரி பட்டு பகுதியில் திமுக கட்சியின் பிரமுகர் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திடீரென திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததோடு கிராமத்தைச் சேர்ந்த 50 பேரையும் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் வைத்து அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைத்தார். இதனால் திமுக கட்சியை சேர்ந்த காவிரிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மாலா சேகர் மற்றும் அவரது சகோதரியான கவுன்சிலர் உமா கண்ணுறங்கம் உட்பட 5 பேர் ஆனந்தன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தகராறு திடீரென கைகலப்பாக மாறியதால் ஆனந்தனின் மகன் சிலம்பரசன் சண்டையை விளக்கியுள்ளார்.

இவரை திமுக கட்சியை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கியதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. சிலம்பரசன் ராணுவ வீரர் என்பதும் இமாச்சல் பிரதேசத்தில் தற்போது பணிபுரிந்து வரும் நிலையில் ஒரு மாத விடுமுறைக்கு வீட்டிற்கு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் அதிமுக கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு, மாலா சேகர், உமா கண்ணுறங்கம், கருணாநிதி, வினோத்குமார், விக்ரம், விக்னேஷ் உட்பட 7 பேர் மீது புகார் கொடுத்தனர். மேலும் திடீரென காவல் நிலையத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.