கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலா தலங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பது என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்த ஆய்வுகள் முடிந்து அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஆகும்.

எனவே கோடை விடுமுறையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறியதாவது, இனிவரும் கோடை காலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை விதிக்கிறோம்.

அந்த வகையில் இ-பாஸ் நடைமுறையின் அடிப்படையில் ஊட்டிக்கு வார நாட்களில் தினமும் 6000 சுற்றுலா வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தினமும் 8000 வாகனங்களை அனுமதிக்கலாம். இதேபோல கொடைக்கானலில் தினமும் 4000 வாகனங்களை அனுமதிக்கலாம்.

சனி, ஞாயிறு நாட்களில் தினமும் 6000 வாகனங்களை அனுமதிக்கலாம். உள்ளூர் வாகனங்கள் மற்றும் விவசாய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாக ஊட்டி செல்லும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. இந்த கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.  முன்கூட்டியே இ.பாஸ் பெற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.