அதிமுக  அனைத்து பொறுப்பில் இருந்தும்  நீக்கம் செய்யப்பட்ட  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திடீரென தனது திட்டங்களை மாற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என அவர் தெளிவாக தெரிவித்துள்ளார். டெல்லி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது மன நிம்மதிக்காக ஹரித்துவார் கோயிலுக்குச் செல்வதாக கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் எந்தக் குழப்பத்திலும் இல்லை; அமைதியாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறியதோடு, அதிமுக ஒருங்கிணைப்பு பணியை தொடருவதாக கூறிய தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று வரை “நாம் கட்சி ஒருங்கிணைப்பை செய்வோம், அதற்காக பேசுகிறோம்” என உறுதி அளித்திருந்த செங்கோட்டையன், தற்போது திடீரென அமைதிக்கான பயணம் என்று கூறி ஹரித்துவார் செல்லும் முடிவை எடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இது அவரது எதிர்கால அரசியல் திட்டங்களில் மாற்றம் வரக்கூடும் என்பதற்கான முன்செயலாக பார்க்கப்படுகிறது.