விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியைத் தொடங்கியபோது, பா.ஜ.க.வை கொள்கை எதிரியாகவும், தி.மு.க.வை அரசியல் எதிரியாகவும் அடையாளப்படுத்தினார்.
ஆரம்பத்தில் அ.தி.மு.க. மீது பெரிய விமர்சனம் இல்லாததால், அக்கட்சியுடன் இணைய வாய்ப்பு இருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால், ஆட்சியில் பங்கு மற்றும் முதல்வர் பதவி குறித்து விஜய் பேசியதால், அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் இணைந்தது. இதனால், அ.தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமி மீதும் விஜய் விமர்சனங்களைத் தொடுத்தார்.
இதற்கிடையே, கரூர் நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரின் ஆதரவு விஜய்யின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. தி.மு.க. ஆட்சிக்கு வருவதைத் தடுக்க, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடலாம் என்று த.வெ.க.வின் சில நிர்வாகிகள் குரல் எழுப்பினர்.
இருப்பினும், சிறுபான்மை வாக்குகளை முழுமையாகப் பெறுவதற்காக, தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸை வெளியே கொண்டு வந்து அவர்களுடன் இணையலாம் என்று விஜய் நினைத்தார். இதற்காக அவர் ராகுல் காந்தியுடன் பேசியதாகவும் கூறப்பட்டது.
ஆனால், விஜய்யின் காங்கிரஸ் கூட்டணி முயற்சிக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் சிலர் உடன்படவில்லை. தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்ந்தால் மட்டுமே எம்.எல்.ஏ. பதவிகள் கிடைக்கும் என்று அவர்கள் எண்ணினர். ராகுல் காந்தியும், விஜய் முதலில் தேர்தலைச் சந்தித்து வாக்குகளை நிரூபிக்கட்டும் என்ற கருத்தில் தி.மு.க.விடம் இருந்து விலகத் தயக்கம் காட்டினார்.
இதற்கிடையில், பீகார் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி விஜய்யை கலக்கமடையச் செய்தது. காங்கிரஸின் உட்பூசல்கள் த.வெ.க.வின் பயணத்தையும் பாதிக்கும் என்று அவர் அஞ்சினார். மேலும், த.வெ.க. தனித்துப் போட்டியிட்டால் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்ற கட்சியினரின் பேச்சும், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதற்கான செலவுகள் மற்றும் வேட்பாளர்கள் விலைக்கு வாங்கப்படும் அபாயம் போன்ற கேள்விகளும் விஜய்யை உலுக்கின.
எனவே, அரசியல் பாதுகாப்பு மற்றும் தி.மு.க.வை வீழ்த்துதல் ஆகிய கணக்குகளைப் போட்டு, தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை விஜய் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்டப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளதால், அடுத்த கட்டத்தில் அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் நேரடியாகப் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.
