உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில், 24 வயதான நர்சிங் படித்து வரும் மாணவி ஒருவர் ஈ-ரிக்ஷாவில் பயணம் செய்தபோது, டிரைவர் மற்றும் அவரது மூன்று நண்பர்களால் கூட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறும் போது ரிக்ஷா தவறான வழியில் செல்ல ஆரம்பித்ததும் என்னை கீழே இறக்கி விடுங்கள் என கூறினேன். ஆனால் டிரைவரும் அவரது நண்பர்களும் என் பக்கத்தில் அமர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தனர். அந்த ரிக்ஷாவை வேறு ஒருவர் வேகமாக இயக்கி சென்றார்.

இதனால் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் ரிக்ஷாவில் இருந்து கீழே குதித்தேன். இதனால் படுகாயம் ஏற்பட்டது என கூறினார். அதன் பிறகு மாணவியை அக்கம் பக்கத்தினர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து தனது மாமாவிடம் கூறிய மாணவி, அவருடைய உதவியுடன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக லக்னோ காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.