துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியதுடன் 8000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலநடுக்கம் லெபனான், இஸ்ரேல், ஜோர்தான், கிரீன்லாந்து போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீட்பு பணிகளில் துருக்கி அரசுக்கு உதவுவதற்காக இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றது.

இந்த நிலையில் சிரியாவில் நிலநடுக்கத்தினால் கட்டிட இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்ட ஏழு வயது சிறுமி தனது சகோதரனை 30 மணி நேரத்திற்கும் மேலாக காப்பாற்ற போராடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதில் மரியம் என்ற சிறுமி இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி படுத்த நிலையில் இருக்கிறார். அவருடன் சிறுமியின் சகோதரனும் படுத்து கிடக்கிறான். இருவரும் நகர முடியாமல் சிமெண்ட் ஸ்லாப்புகளுக்கு கீழே 30 மணி நேரமாக போராடி உள்ளனர்.

மேலும் தனது சகோதரன் மீது எதுவும் விழுந்து விடாமல் இருப்பதற்காக சிறுமி தனது கையால் அவரின் தலையை மறைத்தபடி உள்ளார். இந்த இரண்டு பேரையும் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் சிரியாவில் கட்டிட இடுப்பாடுகளுக்குள் புதிதாக பிறந்த குழந்தை ஒன்று மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தையின் தொப்புள் கொடி கூட தாயுடன் தான் இணைந்து இருந்தது. ஆனால் குழந்தையின் தாயோ நிலநடுக்கதில் உயிரிழந்து விட்டார். இதனை காண்போரின் நெஞ்சம் பதைப்பதைக்கின்றது.