கேரளா கோவலம் பகுதியை சேர்ந்த அகில், அல்பியா என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு அகில் வீட்டில் சம்மதம் தெரிவித்த நிலையில், அல்பியா வீட்டில் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய அல்பியா முடிவெடுத்து உள்ளார். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவலம் பகுதியிலுள்ள இந்து கோவிலில் இவர்கள் திருமணம் செய்ய அகில் வீட்டில் திட்டமிட்டனர்.

அதன்படி மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட தயாராக இருந்த நேரத்தில் 2 காரில் வந்த காவல்துறையினர் அல்பியாவை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்றனர். இதையடுத்து கோவலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மணமகள் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அல்பியா நீதிபதியிடம் தான் அகிலை காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். அதன்பின் அல்பியா அகிலை திருமணம் செய்துக்கொள்ளலாம் என நீதிபதி கூறினார். அதன்படி அவர்கள் திருமணம் செய்துகொண்டு உள்ளனர். இஸ்லாமிய பெண் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிலையில், இதற்கு அல்பியா வீட்டில் கடும் எதிர்ப்பும் இருந்து வருகிறது.