தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கடந்த 28ஆம் தேதி பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக மாணவர்களை சந்தித்து பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு கொடுப்பதாக கூறினார். அதாவது மாநில கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு மட்டும் தேசிய முறையில் எழுத வேண்டும் என்பது அநீதி என குறிப்பிட்ட நடிகர் விஜய் பொது பட்டியலில் இருந்து கல்வியை நீக்கி மாநில பட்டியலுக்கு கொண்டுவர மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு தற்போது காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆதரவு கொடுத்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கருத்தை பிரதிபலித்த தவெக தலைவர் விஜயின் கருத்தை தமிழக காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. மேலும் தமிழக மக்களின் நலனில் அக்கறையுள்ள அனைத்து கட்சிகளும் ஒரு அணியிலும், பாசிச பாஜக மற்றும் தனியாக வேறு அணியில் உள்ளதையும் மக்கள் விரைவில் உணர்ந்து பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்ற பதிவிட்டுள்ளார்.