தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் மாநாட்டை உற்று நோக்கி கவனித்து வருகிறது. இந்த மாநாடு பெரிய அளவில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் உட்பட விஜய் ரசிகர்கள் மற்றும் ஏராளமான பிரபலங்கள் என பலர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற பகுதியில் நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே விஜய்க்கு ஆதரவு கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி பேசுவதால் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் இது குறித்த அறிவிப்பு தேர்தல் சமயத்தில் வெளியாகும் என்று கூறினர். இந்நிலையில் தற்போது அதிமுக கட்சியினருக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒரு வாய்மொழி உத்தரவினை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது விஜய் கட்சியினை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டாராம். அதாவது வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் அதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் வருகிற தேர்தலில் அதிமுக 130 தொகுதிகளிலும், தமிழக வெற்றி கழகம் 80 தொகுதிகளிலும், 24 தொகுதிகளில் விசிக போட்டியிடும் என்று கூறப்படுகிறது. மேலும் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து வரும் நிலையில் விசிக உடன் கூட்டணி  அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றி கழகம் மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று வெளிவந்த தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.