சென்னை அணியின் கேப்டன் தோனி காயமடைந்துள்ளதாக தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். 

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இதுவரை 4 போட்டிகளில் விளையாடி இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) சென்னை அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை எட்டியுள்ளது. இந்த தோல்விக்கு பிறகு சென்னை அணிக்கு மற்றொரு கெட்ட செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சிசண்டா மகலா ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருவதாகவும், அதனால் சில ‘மூவ்மென்ட்’களில் சிக்கல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார் :

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் சிசண்டா மகலா காயம் காரணமாக இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்கும் நிலையில், காயம் அடைந்த வீரர்களின் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் சென்னை அணிக்கு மற்றொரு கெட்ட செய்தி கிடைத்துள்ளது. புதன்கிழமையன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்ததை அடுத்து, பிளெமிங் இந்த தகவலை தெரிவித்தார்.

பயிற்சியாளர் ஃப்ளெமிங் கூறுகையில், ‘அவர் (தோனி) முழங்கால் காயத்துடன் போராடி வருகிறார், அதை அவருடைய சில அசைவுகளில் காணலாம். இதனால் அவருக்கு சில சிரமங்கள் ஏற்படுகிறது. அவரது உடற்தகுதி ஒரு தொழில்முறை வீரரைப் போன்றது. போட்டி தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே அவர் ஆயத்தங்களைத் தொடங்குகிறார். அவர் ராஞ்சியில் வலைகளில் பயிற்சி செய்தார், ஆனால் அவர் சென்னையை அடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே சீசனுக்கு முந்தைய ஏற்பாடுகள் தொடங்கின என்று கூறினார். தல தோனி காயமடைந்துள்ளதால் சென்னை ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்..