ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் பாஸ் பாட்ஷாபூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் கர்தார் நினைவு சீனியர் செகண்டரி பள்ளியில் நேற்று காலை அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பள்ளியின் முதல்வராக இருந்த ஜக்பீர் சிங் (வயது 50) என்பவரை, அதே பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கத்தியால் பலமுறை குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட தகவலின்படி, மாணவர்களிடம் தலைமுடி வெட்டவும், ஒழுக்கமான உடைகள் அணியவும், பள்ளியின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றவும் முதல்வர் எச்சரிக்கை வழங்கியுள்ளார். இந்த எச்சரிக்கையால் கடுப்பான மாணவர்கள், இன்று காலை 10.30 மணியளவில், அவரை நேரில் வந்து தாக்கியுள்ளனர்.

இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மாணவர்கள் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த கொடூரச் சம்பவம், ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் “குரு பூர்ணிமா” நாளில் நடந்திருப்பது ஹரியானா மாநில மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்ற முதல்வர், எதிர்பாராதவிதமாக மாணவர்களால் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரிவான விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு மட்டுமே இந்த கொலையின் முழுமையான பின்னணி வெளியாகும் என காவல் கண்காணிப்பாளர் அமித் யஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.