சிவசேனா (யுபிடி) கட்சியின் முன்னாள் எம்பியான விநாயக் ராவத் மற்றும் அவரது கவுன்சிலர் மகனான கீதேஷ் ராவத் ஆகியோருக்கு எதிராக, அவர்களது வீட்டு மருமகள் கிரிஜா ராவத் தானேவின் காபூர்பாவடி காவல் நிலையத்தில் அதிரடியாகப் புகார் அளித்துள்ளார். தனது கணவர் மற்றும் மாமனார் ஆகிய இருவரும் சேர்ந்து தன்னை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கியதாகவும், அமானுஷ்ய பில்லிசூனியம் மற்றும் செய்வினை வழிபாடுகளில் தம்மைக் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
மருமகள் கிரிஜாவின் அனுமதியின்றி, பில்லிசூனியம் செய்வதற்காக அவரது தலையின் முடிகளை வெட்டியுள்ளதாகவும், அவரை மனரீதியாக உடைப்பதற்காகக் கட்டாயப்படுத்தி மாட்டு மூத்திரத்தைக் குடிக்க வைத்துச் சித்திரவதை செய்ததாகவும் அந்த எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஃபிரோஸ் பாபா மற்றும் காஜி பாபா என்ற இரண்டு போலி சாமியார்களுக்கும் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த உயர் மட்ட விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட தானே போலீஸார், முன்னாள் எம்பி விநாயக் ராவத், அவரது மகன் மற்றும் இரண்டு சாமியார்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
