சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்த நடராஜன், வங்கிக் கடன் மூலம் சொந்தமாக வாங்கிய லாரியை ஓட்டி வந்தவர். சமீபத்தில், தனது அக்காவின் மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக, லாரியை வேறு டிரைவரிடம் ஒப்படைத்து, வீட்டு தேவைகளுக்கான சரக்குகளை எடுத்துக்கொண்டு தனது ஊருக்கு திரும்பினார்.

அந்த டிரைவர் மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் லோடு எடுத்தபோது, லாரி விபத்துக்குள்ளாகியது. இதில் டிரைவருக்கு பலத்த காயமும், லாரிக்கு பெரும் சேதமும் ஏற்பட்டது. இதை அறிந்த நடராஜன், உடனடியாக மேற்கு வங்கத்திற்கு சென்று, டிரைவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து, பின்னர் தனது லாரி நிற்கும் இடத்திற்கு சென்றார்.

லாரியில் இருந்த சரக்குகளை மற்றொரு வாகனத்திற்கு மாற்ற திட்டமிட்டு, வாகனத்தருகே தூங்கிய நிலையில், மற்றொரு சரக்கு வாகனம் அவரது லாரியின் பின்புறத்தில் மோதியதால் இரண்டாவது விபத்தும் ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும், மொழி தெரியாத ஊரிலும், கையில் பணமின்றியும், வழியறியாமல் தவித்த நடராஜன், தனது நிலையை “E Vahan Seva” என்ற வாட்ஸ்அப் குழுவில் வீடியோவாக பதிவிட்டார்.

இந்த வீடியோவை பார்த்த அந்த குழுவின் தலைவர் கணேஷ், குழுவில் உள்ளவர்கள் தலா ரூ.234 அனுப்பினால் நடராஜனையும் அவரது லாரியையும் மீட்டுவிட முடியும் என கேட்டுக்கொண்டார். இதற்குப் பெரும் ஆதரவு கிடைத்து, வெறும் 24 மணி நேரத்தில் ரூ.2.12 லட்சம் தொகை சேகரிக்கப்பட்டது.

பின்னர், அந்த தொகையை பயன்படுத்தி நடராஜனின் லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது. மேலும் லாரியை சிவகிரிக்கு கொண்டு வந்து சரிசெய்வதற்கும், நடராஜனுக்கு நிதி உதவி அளிக்கவும் குழுவினர் தொடர்ந்து செயலில் ஈடுபட்டுள்ளனர். இது சமூக ஊடகங்களில் மனிதநேயத்தின் சக்தியை மீண்டும் நிரூபிக்கும் நிகழ்வாக இருக்கிறது.