உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் ஓடும் பள்ளிப் பேருந்தின் தளம் (Floor) திடீரென உடைந்ததால், 6 வயது சிறுமி கீழே விழுந்து சக்கரத்தில் நசுங்கிப் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் யு.கே.ஜி படித்து வந்த அனன்யா என்ற சிறுமி, பள்ளி முடிந்து தனது அண்ணனுடன் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பேருந்தின் தளம் உடைந்ததில், எதிர்பாராத விதமாக அனன்யா அந்த ஓட்டை வழியாகக் கீழே விழுந்தார். இதைக் கண்டு அவரது அண்ணன் கூச்சலிட்டதை அடுத்து, பேருந்தை நிறுத்திய டிரைவர், சிறுமியின் உடலைப் பேருந்துக்குள்ளேயே போட்டுவிட்டுத் தப்பியோட முயன்றார்.

​ஆத்திரமடைந்த கிராம மக்கள் டிரைவரை விரட்டிப் பிடித்துத் தர்ம அடி கொடுத்ததுடன், சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுமியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். “இது ஒரு விபத்துதான்” என்று பள்ளி நிர்வாகம் மழுப்பலாகப் பதில் கூறி வரும் நிலையில், தனது கண்முன்னே தங்கை உயிரிழந்ததைக் கண்ட அண்ணன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுவது பார்ப்பவர் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.