தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த ஒரு ஆட்சி நடந்தது. தற்போது திமுக அரசில் எண்ணற்ற திட்டங்களால் இந்தியாவே தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்கிறது என்று கூறினார். அவர் தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜகவிடம் அடகு வைத்ததாக அதிமுகவை மறைமுகமாக குறிப்பிட்ட நிலையில் இதற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் திரு. ஸ்டாலின் அவர்களே ? கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளமாகப் பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு , இன்று வரை துரோக சரித்திரமாக நீண்டுகொண்டு இருக்கிறது. கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே மறந்துவிட்டு இந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்தது முதல் , இன்றைக்கு கொல்லைப்புறமாக PM Shri திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் அறைவாலயத்திற்கு -திற்கு , அதிமுகவை பற்றி பேச எள்ளளவாவது அருகதை இருக்கிறதா?

மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு டெல்டா விவசாயிகளின் உரிமையை அடகு வைத்தவர் தானே நீங்கள்? நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே திமுக- காங்கிரஸ் கூட்டணி தானே? அதே கூட்டணியை சேர்ந்தவர்களை வைத்து உச்சநீதிமன்றம் வரை சென்று நீட்டை கொண்டு வர வாதாடி மாணவர்களின் மருத்துவ கனவை அடகு வைத்த பாவிகள்தானே நீங்கள் ? அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏல முடிவுகள் வரும் வரை கள்ள மவுனம் சாதித்து, பல்வேறு சதிச்செயல்களால் மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையே அடகு வைக்க முயற்சித்தவர்கள் தானே நீங்கள்? 3வது மாடியில் CBI ரெய்டு நடக்க, முதல் மாடியில் முன்று மடங்கு சீட்களை கொடுத்து காலில் விழுந்த கொத்தடிமைகள் தானே நீங்கள்?

ஆனால் , பாஜக-வுடன் கூட்டணியில் இருந்த போதும், 7.5% இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணையம், என்ற அறிவிப்பு என தமிழ்நாட்டின் எந்த அடிப்படை உரிமையும் பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் மக்களுக்காண ஆட்சி செய்து, தமிழ்நாட்டை காத்திட்ட இயக்கம் தான் அஇஅதிமுக. மத்திய அரசின் அனைத்து ஆய்வறிக்கைகளிலும் அன்று தமிழ்நாடு முன்னிலை வகிக்க ஒரே காரணம், 10 ஆண்டு காலம் அதிமுக நடத்திய மக்களுக்கான ஆட்சி; உலக நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது எங்கள் “தமிழ்நாடு மாடல்” ஆட்சி!

ஆனால், ஒன்றிற்கும் உதவாத, உருப்படாத ஒரு வெற்று மாடல் அரசை நடத்தி கொண்டு, தனக்குத் தானே கையைத் தட்டிக்கொண்டு, பொம்மை ஆட்சி நடத்தும் நீங்கள், மக்களை பொறுத்த வரை வெறும் விளம்பர மாடல் தான் ! அப்படி என்ன ஆட்சி செய்து கிழித்து விட்டீர்கள் என்று மேடையில் முதல்வர் ஸ்டாலின் வீரவசனம் பேசுகிறீர்கள்? எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் கேட்கிறேன்- உங்களால் என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியுமா? அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இருக்கிறதா? எத்தனை துண்டு சீட்டுகள் வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள்! பாத்துக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.