உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது வீரர் முகேஷ். விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். இந்நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 14வது சுற்றில் 58வது காய் நகர்தலில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்தப் போட்டி டிராவில் முடியும் என்று நினைக்கும் நிலையில் குகேஷ் 7.5 புள்ளிகளைப் பெற்று அசத்தியுள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அவரின் வெற்றியை கண்டு தமிழ்நாடே பெருமை கொள்கிறது. இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த சாதனையால் உலக தரம் வாய்ந்த சாம்பியன்களை உருவாக்கும் உலகின் செஸ் தலைநகர் சென்னை என்ற இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதேபோன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், குகேஷின் வெற்றி இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்தது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மீது புது வெளிச்சம் பாய்ந்துள்ளது. SDAT திட்டத்தில் முக்கிய வீரராக திகழும் குகேஷ் சர்வதேச செஸ் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.