நடிகர் விஜயின் புதிய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார். அதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என கட்சியின் பெயரை அறிவித்தவுடன் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து  அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி வருகின்றனர். இதனிடையே டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்துள்ளார் அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

இதையடுத்து இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் திரு. நடிகர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.