தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைவது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தவெக விடுத்த அழைப்பை ஏற்று, விசிக-வின் பொதுச்செயலாளர் மற்றும் முன்னணி பொறுப்பாளர்களுடன் தீவிர கலந்தாய்வு நடத்தப்பட்டதாக அவர் கூறினார். பெரும்பாலான நிர்வாகிகளின் ஒட்டுமொத்தக் கருத்தின் அடிப்படையில் இந்த அமைச்சரவையில் பங்கேற்பது என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விசிக சட்டமன்ற உறுப்பினர்களான வன்னியரசு, ஜோதிமணி ஆகிய இருவரில், வன்னியரசு அவர்களின் பெயரை அமைச்சரவைக்காகப் பரிந்துரைக்க கட்சி முடிவெடுத்துள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற முழக்கத்தை 1999 ஆம் ஆண்டிலேயே மூப்பனாருடன் தேர்தல் அரசியலில் களம் கண்டபோது முதன்முதலில் முன்மொழிந்த இயக்கம் விசிக தான் என்று திருமாவளவன் சுட்டிக்காட்டினார். கட்சியின் நீண்டகால கனவை நனவாக்கும் வகையிலும், தவெக-வின் அழைப்பை மதிக்கும் வகையிலும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாகக் கூட்டணி ஆட்சி என்பது அறிமுகமாகிறது என்றும், விசிக-வின் இந்த நிலைப்பாடு தமிழக அரசியலில் ஒரு புதிய மைல்கல் என்றும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பெருமிதத்துடன் கூறினார்.