பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். இதனால் மக்கள் வீடுகளில் அதிக நேரம் மின்விசிறி, ஏசி, ஏர்கூலர்களை பயன்படுத்துவார்கள். எனவே மின்பயன்பாடு கோடைகாலத்தில் அதிகமாக இருக்கும். இந்நிலையில் தமிழ்நாட்டு வரலாற்றிலே நேற்றுதான் மின் நுகர்வு அதிகபட்சமாக இருந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கோடை காலத்தில் மின்சாரத்தின் தேவை அதிகமாக இருக்கும் நிலையில், நேற்று அதிகபட்சமாக 41.30கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர். இதற்கு முன் அதிகபட்ச மின் நுகர்வாக 40 கோடி யூனிட் பயன்படுத்தப்பட்டது. மாநில மின் நுகர்வு தேவை 18,882 மெகாவாட்டை எட்டியுள்ளது என பதிவிட்டுள்ளார்.