தமிழக சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்து வரும் நிலையில், அவருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வரலாறு காணாத வகையில் 85.10% வாக்குகள் பதிவாகின. இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், த.வெ.க தற்போது வரை 107 தொகுதிகளில் முன்னிலை பெற்று முன்னணியில் உள்ளது. குறிப்பாக, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட த.வெ.க தலைவர் விஜய், இரண்டு இடங்களிலும் தனது போட்டியாளர்களைப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.

​இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் கொண்டாடும் வகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் (X) தளத்தில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் அவர்கள் பெற்ற மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களுக்குச் சேவை செய்வதற்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்விற்கும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கும் அவர் மேற்கொள்ளும் முயற்சிகளில் எல்லா வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அண்டை மாநில முதலமைச்சரே விஜய்யின் அரசியல் வருகையைப் பாராட்டியுள்ளது த.வெ.க தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.