தமிழக மீனவர்கள் 6 பேரின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து‌ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் பிப்ரவரி 23-ம் தேதி  தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை முதல்வர் ஸ்டாலின் வேதனையோடு குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 21-ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற நிலையில், பாரம்பரிய கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை இரும்பு கயிறுகளை கொண்டு தாக்கியதோடு, மீன்பிடி உபகரணங்கள், ஜிபிஎஸ் கருவி, இரண்டு பேட்டரிகள் மற்றும் எஞ்சின் போன்ற பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த 5 மீனவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தாக்குதல் சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை மீறி உள்ளதோடு பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் உடமைகளை தொடர்ந்து இலங்கை கடற்பறையினர் பறிப்பதோடு அவர்களை தாக்கவும் செய்கிறார்கள். மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் மீனவர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரின் இத்தகைய வன்முறைச் செயல்கள் கண்டிக்கத்தக்கது. மேலும் இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் ஆழமாக கொண்டு செல்வதோடு நமது மீனவர்கள் மீது தாக்குதல் தடுக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.