இந்தியாவில் மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்வதற்கு க்யூட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் போன்றவைகள் நடத்தப்படுகிறது. இதில் கியூட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் கட்டாயமாக 10-ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா காலகட்டத்தின் போது 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டதால், 10-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் விவரம் குறிப்பிடப்படவில்லை. இதன் காரணமாக 10-ம் வகுப்பு மதிப்பெண்களை மாணவர்களால் விண்ணப்பத்தில் பதிவு செய்ய முடியாது.

இதன் காரணமாக தமிழக மாணவர்கள் மத்திய அரசு பல்கலைக்கழக தேர்வுகளுக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், 10-ம் வகுப்பு மதிப்பெண்களை கட்டாயம் நீக்க வேண்டும் என்பதை மத்திய அரசு நீக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் க்யூட் நுழைவு தேர்வில் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை கேட்கும் பகுதி நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண்களை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்பது  ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது கியூட் தேர்வுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.