தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட பாஜக மற்றும் அதிமுக கூட்டணி இன்று உறுதியானது. இது தொடர்பாக அமித்ஷா அறிவிப்பு வெளியிட்ட நிலையில் திமுக மிகப்பெரிய அளவில் அதாவது 36 ஆயிரம் கோடி வரை ஊழல் செய்துள்ளனர் என்றும் முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதியும் மிகப்பெரிய ஊழல்வாதிகள் என்றும் கூறினார்.

அதன் பிறகு ஊழலை மறைக்கவும் தமிழகத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை திசை திருப்பவும் தான் நீட் தேர்வு விவகாரம் மற்றும் தொகுதி மறு சீரமைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை திமுக கையில் எடுத்துள்ளது என்றும் கூறினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக கட்சியின் எம்.பி கனிமொழி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,

எடப்பாடி பழனிச்சாமி பாஜக உடன் கூட்டணி வைத்தது அதிமுகவுக்கு செய்துள்ள மிகப்பெரிய துரோகம். தமிழக மக்களுக்கும் துரோகம் செய்துள்ளார். பாஜக உடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு ஆரம்பத்தில் இருந்தே கள்ளக் கூட்டணி வைத்திருந்தார். வக்பு மசோதாவை எதிர்ப்பதாக கூறிவிட்டு அதை நிறைவேற்றியவர்களுடன் கூட்டணி அமைத்துவிட்டார்.

இதன் மூலம் சிறுபான்மையினரை இழிவு படுத்தியவர் இபிஎஸ் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோரை இழிவு படுத்தியவரை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளார். மத்திய பாஜக அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை பணிய வைக்கிறது.

அதிமுக தலைமையில் கூட்டணி என்று கூறிவிட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசக் கூட அனுமதி வழங்கவில்லை. அமித்ஷா கூட்டணி பற்றி அறிவித்த போது எடப்பாடி பழனிச்சாமி அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். எப்போதும் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தான் கூட்டணி குறித்து அறிவிப்பார்கள். ஆனால் அவர் அமைதியாக இருந்தது ஏனென்றால் கேள்வி எழுப்பியுள்ளார்.