தமிழக பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். இந்த மாதத்திற்குள் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படும் நிலையில் அண்ணாமலை புதிய தலைவருக்கான ரேசில் நான் இல்லை என்று கூறிவிட்டார். அதோடு யாரையும் தான் ரெக்கமண்ட் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். தமிழகத்தின் புதிய பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதே சமயத்தில் வானதி சீனிவாசன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் புதிய தலைவருக்கான ரேசில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தயாராகி வருவதால் அண்ணாமலையை தலைமை பொறுப்பிலிருந்து மாற்ற முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது புதிய தகவலாக சரத்குமார் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் தன்னுடைய கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த சரத்குமார் கட்சிக்காக தீவிர பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவியும் நடிகையையுமான ராதிகாவுக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக சீட் கொடுத்தது. இந்த நிலையில் சரத்குமார் மாநில தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.