பள்ளி மாணவர்கள் கற்பனை திறனை அதிகரிக்கும் இடமாகவும் அவர்களுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை தூண்டும் இடமாகவும் பள்ளிகள் இருக்க வேண்டும். மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கிளிப் பிள்ளையாக இருக்காமல் புதிய ஆற்றல் படைக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை கொடுக்கக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள். பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் என ஒவ்வொரு மாணவரும் கிலோ கணக்கில் புத்தகப் பைகளை தூக்கி செல்கிறார்கள். இதற்கிடையில் மாதத்தில் ஒரு நாளாவது புத்தகம் இல்லாமல் பள்ளி சென்று பாடம் கற்பிக்கும் விதமாக நோ பேக் டே என்று ஒரு சில மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளது.

சமீபத்தில் புதுச்சேரியிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த நாளில் கலை இலக்கியம், வினாடி வினா, விளையாட்டு உள்ளிட்ட பலவற்றில் மாணவர்களை ஈடுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.