
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகளும் நடிகையுமான இந்துஜா சமீபத்தில் ஹெகுரு (Heguru) பயிற்சி முறையைப் பற்றிய வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், “தமிழ்நாட்டில் குழந்தைகள் சிந்தனை திறன் குறைந்து விட்டதாகவும், ஹெகுரு பயிற்சி மூலம் அதை மேம்படுத்த முடியும்” என கூறியிருந்தது. இதற்கு பொதுமக்களிடையே வியப்பும், எதிர்ப்பும் எழுந்த நிலையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் (Fact Check Unit) இந்த வீடியோவில் பரப்பப்பட்ட தகவல்கள் ஆதாரமற்றவை என்றும், தவறானவையாகும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனை திறன் குறைந்துவிட்டது” என கூறுவது முற்றிலும் தவறானது என்றும், அது எந்தவிதமான ஆய்வுப் புள்ளிவிவரங்களும் அல்லது கல்வித் தரவுகளும் இல்லாத பொய்யான தகவலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெகுரு பயிற்சி முறையைப் பற்றிய விளக்கங்களும் சான்றுகளற்றவையாக இருந்ததாகவும், பொது மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன் பின்னணியில், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த பயிற்சிக்காக மத்திய அரசு பட்ஜெட்டில் எந்தவிதமான நிதியும் அறிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.