தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் தடையின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, அந்தந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களை பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வாக்குப்பதிவு அட்டவணையின்படி, அசாம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல், தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடப்பதால், வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், ஊழியர்கள் அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை எவ்வித ஊதிய இழப்புமின்றி நிறைவேற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.