தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அரசே தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மூலமாக ஏற்று நடத்தி வருகிறது. ஆனால் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று பாமக உள்ளிட்ட கட்சிகள் பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள் .தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் பொழுதும் மதுபானங்கள் பல கோடி ரூபாய்க்கு விற்பனையாவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2 நாட்களில் 467.69 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மது ஒழிப்பிற்காக ராமதாஸ் ஆயிரக்கணக்கான இடங்களில் போராட்டம் நடத்தி இருக்கிறார். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தீர்ப்பை நாங்கள் பெற்றபோது இந்தியாவில் 91 ஆயிரம் மதுக்கடைகள் தமிழகத்தில் 3221 மது கடைகள் மூடப்பட்டது. தீபாவளி அன்று மட்டும் பல்லாயிரம் கோடிக்கு மது விற்பனையாக உள்ளது . காந்தி ஜெயந்தி அன்று மதுக்கடைகளை மூடுகிறீர்களே அதுபோல தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாட்களிலும் டாஸ்மாக் கடைகளை மூடி விடலாமே. ஆனால் அரசுக்கு டாஸ்மாக் கடைகளை மூடும் எண்ணம் கிடையாது என்று குற்றம் சாட்டியுள்ளார்.