காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜகவை ஒரு குறைகின்ற கட்சியாக தான் நான் பார்க்கிறேன். கண்டிப்பாக எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் பாஜகவால் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது என்றார். அதன்பிறகு விஜய் பரந்தூர் சென்றது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, நான் தமிழக அரசியலில் விஜயை ஒரு கௌரவ தோற்றமாக தான் பார்க்கிறேன். அவர் அரசியலில் ஒரு கௌரவ தோற்றம் போல் வருகிறார். பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்று கூறியவர் அதற்கு பதில் மாற்று  எங்கு அமைக்கலாம் என்பதை சொல்லவில்லை என்று கூறினார். இந்நிலையில் முன்னதாக பரந்தூரில் ஏர்போர்ட் வேண்டாம் என்று போராடிவரும் மக்களை நடிகர் விஜய் நேரில் சென்று சந்தித்தார்.

அப்போது விமான நிலையம் அங்கு அமையக்கூடாது எனக் கூறிய விஜய் அதற்கு பதிலாக வேறு இடத்தில் அமைத்துக் கொள்ளுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதாவது விவசாய நிலங்கள் அழியாத குடியிருப்புகள் அழியாத பகுதியில் விமான நிலையத்தை அமைக்குமாறு விஜய் கூறிய நிலையில் அப்போதே அதற்கான மாற்று இடத்தையும் அவர் சொல்ல வேண்டும் என்று பலர் கூறினர். தற்போது கார்த்தி சிதம்பரமும் அதே கருத்தை தான் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.