தமிழகம் முழுவதும் பிப்ரவரி 9ம் தேதி இன்று வெள்ளிக்கிழமை குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் வளர இளம் பருவத்தினர் 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் என மொத்தம் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க பொது சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதில் விடுபட்டவர்கள் பிப்ரவரி 15ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறும்.

ஒவ்வொரு வருடமும் தேசிய குடற்புழு நீக்க நாள் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் தகுதியான அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இன்று முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு சார் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகள் என மொத்தம் 1.16 லட்சம் இடங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு மாத்திரைகளை விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த குடற்புழு நீக்க மாத்திரைகளை உட்கொள்ளாத பட்சத்தில் ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்த சோகை, வயிற்று உபாதைகள் மற்றும் சோர்வு நிலை உள்ளிட்ட பிரச்சனைகளை குழந்தைகள் சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளது.