திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே உள்ள குமடிப்பூண்டி பகுதியில் கடந்த ஜூலை 12ஆம் தேதி, 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளியை கண்டுபிடிக்க எட்டுக்கும் மேற்பட்ட போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை செய்த நபரின் சிசிடிவி புகைப்படங்களை போலீசார் பல்வேறு தளங்களில் பகிர்ந்து, அந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில், ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அந்த சந்தேக நபரின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த குற்றவாளி தொடர்பான தகவல்களைத் தருபவர்களுக்கு ₹5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என தமிழக காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தகவல் தருபவர்களின் அடையாளம் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த நபரைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக 99620 60948 என்ற திருவள்ளூர் மாவட்ட காவல்துறையின் கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்கலாம் எனவும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க காவல்துறை விரைந்து செயல்பட்டு வருவதோடு, சமூகநீதி மற்றும் சிறுமியின் பாதுகாப்புக்கான முதல் படியாக, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
