ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

தரிசனத்திற்குப் பின் பேசிய அவர், “தமிழகத்தில் உண்மையான விடியல் கிடைத்திட எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும். தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழவும், போதை கலாச்சாரம் அற்ற மாநிலமாக மாறவும் அன்னை மீனாட்சியிடம் வேண்டிக் கொண்டேன். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பாதுகாப்புடன் கூடிய, ஊழலற்ற சமமான ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழக மக்களுக்கு விடியலை எடப்பாடியாரால் மட்டுமே தர முடியும். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி, எந்த முதலமைச்சரும் செய்யாத சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்களோ, அதே போன்ற பொற்கால ஆட்சியை மீண்டும் கொண்டு வர அவர் நடவடிக்கை எடுப்பார்” எனக் குறிப்பிட்டார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சினிமா கவர்ச்சிக்கு மக்கள் மத்தியில் எப்போதும் மவுசு உண்டு. அமிதாப் பச்சன் வந்தாலும் கூட்டம் கூடும். எனவே, கூட்டத்தை வைத்து எதையும் எடை போடக் கூடாது. யார் நல்லாட்சி தருவார்கள் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்” என்று கூறினார்.

மதுரை மாநகராட்சி நிர்வாகம் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்த செல்லூர் ராஜூ:
மதுரை மாநகராட்சியில் தி.மு.க.வினர் சுமார் 200 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளனர்.
மேயர் இல்லாததால் கவுன்சிலர் கூட்டம் நடைபெறுவதில்லை; இதனால் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

திறமையற்ற நிர்வாகத்தால், தற்போதைய ஆட்சி ’23-ம் புலிகேசி’ ஆட்சியைப் போல உள்ளது.
போதைப்பொருள் மற்றும் சட்டம்-ஒழுங்கு “தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை தங்கு தடையின்றி நடக்கிறது. அமேசான், ஸ்விக்கி போல போதைப்பொருட்களும் டோர் டெலிவரி செய்யப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைக் காட்டுகிறது” என வேதனை தெரிவித்தார்.

இறுதியாகப் பேசிய அவர், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட காங்கிரஸ்காரர்கள் இப்போது அந்தப் கட்சியில் இல்லை என்றும், தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் தொண்டர்களுக்குள் ஆதங்கம் இருக்கத்தான் செய்யும் என்றும் தெரிவித்தார்.