
தமிழகத்தில் ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட தயாரிப்புகளுக்காக கருங்கல் வெட்டி எடுக்கப்படும். அதற்கான உரிமை தொகையை குவாரி உரிமையாளர்கள் ஒவ்வொரு வருடமும் செலுத்த வேண்டும். இதற்கான கட்டணம் கடந்த வருடம் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் ஜல்லி மற்றும் எம்சாண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கருங்கல், ஜல்லி மற்றும் வெட் மிக்ஸ் ஆகியவற்றின் விலை நூறு யூனிட் 2000 ரூபாயாக இருந்த நிலையில், 3000 ரூபாயாக உயர்த்தினர். அதேபோன்று எம் சாண்ட் மணலின் விலை யூனிட் 2000-ல் இருந்து 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதேபோன்று இன்று முதல் எம் சாண்ட், ஜல்லி மற்றும் கருங்கல் ஆகியவற்றின் விலையை உயர்த்தப் போவதாக குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு விலை உயர்ந்துள்ளதால் இந்த வருடம் விலையை உயர்த்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கும் என்பதால் இதற்கு இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் இது தொடர்பாக தொழில் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி விலை உயர்வை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதே போன்று இந்த விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று முதல் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி போன்றவைகளின் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.