தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மொத்தம் 450-க்கு மேல் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையானது நடத்தப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் வருடம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி தொடங்கி ஜூன் 4 ஆம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட 1,78,959 பேர் குறித்த தரவரிசை பட்டியல் நேற்று வெளியாகியது.

இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்திருக்கும் பேட்டியில், பொறியியல் படிக்க 2,29,175 மாணவர்கள் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் லட்சத்து 87 ஆயிரத்து 847 மாணவர்கள் பதிவுக்கட்டணம் செலுத்தி உள்ளனர். இதில் 1,78,959 மாணவர்கள் தகுதி பெற்றிருக்கின்றனர். இந்நிலையில் நீட்தேர்வு முடிவுகள் வெளியானாலும், மருத்துவ கலந்தாய்வு இன்னும் துவங்கவில்லை.

இதனிடையே கட் ஆப் அதிகம் வாங்கிய மாணவர்கள் மருத்துவம் பயில விரும்புகின்றனர். உடனடியாக கலந்தாய்வு நடத்தினால் அவர்கள் பொறியியல் படிப்பை நிறுத்தி விட்டு மருத்துவத்தில் சேர்ந்து விடுவார்கள். இதனால் பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் தேக்கமடைந்து விடும். ஆகவே மருத்துவ கலந்தாய்வு துவங்கி சில நாட்களில் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.