தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயரும் என்று அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது ஆட்டோ கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பல வருடங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அதனை ஏற்காததால் தற்போது கட்டணத்தை தாங்களே உயர்த்தியுள்ளதாக அறிவித்தனர். அதன்படி ஒரு கிலோமீட்டருக்கு 18 ரூபாய் வரையில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இரவு நேரங்களில் 50% அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் பிப்ரவரி 1 ஆம்‌ தேதி முதல் இந்த புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது தமிழக போக்குவரத்து கழகம் ஆட்டோ சங்கங்கள் கூட்டமைப்புக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் இது தொடர்பான கோரிக்கை பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அதோட அரசிடம் அனுமதி பெறாமல் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் இது தொடர்பாக வரும் புகாரின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.