தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறப்புக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு மாதம் கழித்து பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க வேண்டும் எனவும் மாணவர்களின் உடல் மற்றும் மனநலன்கள் சிறப்பு பயிற்சிகள் வழங்கவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகளின் கல்வியின் தரம், மாணவர்களின் நலன், மகிழ்ச்சியான கற்றல் சூழல் மற்றும் ஆசிரியர் மாணவர் இடையே நல்லுறவு மேம்பட பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் வாரத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மனநலம், குழந்தைகள் மீதான வன்முறை தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், தன் சுத்தம் பேணுதல் உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். இந்த நிகழ்ச்சிகள் மூலமாக மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி வாய்ப்பை பெறுவார்கள். அரசு இதற்காக பள்ளிகளில் கண்ணொளி காப்போம் திட்டம், தேசிய குழந்தைகள் நலத்திட்டம் மற்றும் வாராந்திர இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.