தமிழக அரசு திறந்தவெளி மற்றும் நீர் நிலைகளில் மலக்கசடு, கழிவு நீர் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்றும் வாகனங்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதாவது கழிவுகளை வாகனங்களின் மூலம் முறையற்ற முறையில் அகற்றுவதால் உயிரிழப்புகள் போன்ற ஆபத்துகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக கழிவுநீரை எடுத்துச் செல்லும் வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்கு படுத்துவதற்கு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர பகுதிகளில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு தகுந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட விதிகள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின் படி மலக்கசடு மற்றும் பிற கழிவுகளை அகற்றும் வாகனங்களுக்கு நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டுகள் செல்லதக்க வாகன உரிமை வழங்கப்படுவதோடு அதற்கு கட்டணமாக ரூபாய் 2000 வசூலிக்கப்படும். உரிமம் பெற்றவர் தவிர வேறு யாரும் கழிவுகளை எடுத்துச் செல்லக்கூடாது. அதன் பிறகு உரிமம் பெற்றவர்கள் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நேரம் மற்றும் வழி போன்றவற்றை பின்பற்றி குறிப்பிட்ட இடத்திலிருந்து முறைப்படி கழிவுகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

உரிமம் பெற்ற வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும். உரிமம் பெற்ற வாகனங்கள் கசடுகளை அப்புறப்படுத்துவதற்கு 6,000 லிட்டர் வரைக்கும் 200 ரூபாயும், 6,000 லிட்டர் மேற்பட்டவைகளுக்கு ரூபாய் 300-ம் கட்டணமாக வரையறுக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்றவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டத்தின் விதிமுறைகளை மீறி செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமை பெற்ற நபருக்கு முதலில் 25,000 ரூபாயும், 2-வது முறை தவறு நடக்கும்போது 50,000 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும்.

தொடர்ந்து குற்றங்கள் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, குறிப்பிட்ட கருவி, உபகரணங்கள் மற்றும் எந்த ஒரு வாகனத்தையும் அல்லது பிற பொருட்களையும் பறிமுதல் செய்யவும் வழிவகை வாக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர் 30 நாட்களுக்குள் தங்களுடைய புகாரை பதிவு செய்து கொள்ளலாம். கழிவுகளை மேலாண்மை செய்வதற்கும், ஒழுங்குமுறை படுத்துவதற்கும் விரிவான செய்முறை நெறிமுறைகள் வாங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்ட விதிகள் மற்றும் நடைமுறைகள் மூலம் நீர்நிலைகள் மற்றும் திறந்தவெளிகளில் மலக்கசடு மற்றும் பிற கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க முடியும்.