சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிவகங்கையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் சிவகங்கை மாவட்டம் சிங்கனம்புணரி தாலுகா மல்லாக்கோட்டையில் சண்டி வீரன் சாமி மற்றும் பெரிய கோட்டை மூத்தையனார் என்ற 2 பிரசித்தி பெற்ற கோவில்கள் இருக்கிறது. இந்த கோவில்களில் ஒவ்வொரு வருடமும் தைத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து திருவிழாவை கொண்டாடுவார்கள். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சசிதுரைபாண்டி என்பவர் தனக்கு முதல் மரியாதை செய்யுமாறு கோவில் பூசாரிகளை வற்புறுத்தி வருவதோடு அவருடைய ஆட்களுடன் வந்து திருவிழாவில் குடை பிடிப்பது, பரிவட்டம் கட்டுவது, தலைப்பைகை அணிந்து கொண்டு கூட்டத்தில் நடந்து செல்வது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்.

எனவே கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது ஒருவேளை முதல் மரியாதை கேட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது போன்ற வழக்குகள் ஏற்கனவே பலமுறை வந்துள்ளது. கோவில் என்பது அனைவருக்கும் சமமானது. அனைத்து மக்களுமே சமம் தான். எனவே கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை செய்யக்கூடாது. பரிவட்டம், தலைப்பாகை, குடை பிடிப்பது போன்ற எந்த ஒரு முதல் மரியாதையும் யாருக்கும் கூடாது. எனவே சிறப்பு மரியாதை வழங்குமாறு வற்புறுத்தக்கூடாது. மேலும் விழாவினை அமைதியான முறையில் நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.