
தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிப் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் கூடும். இந்த தாழ்வு பகுதி வலுப்பெற்று பெங்கல் புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன் பிறகு தெற்கு அந்த மான் கடல் பகுதிகளிலிருந்து மன்னார் வளைகுடா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோன்று நாளையும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரையில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.