தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் நடமாடும் அரிசிக் கொம்பன் யானையால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கடைகளில் புகுந்து அரிசியை விரும்பி உண்பதால் இந்த யானைக்கு அரிசிக் கொம்பன் என்ற பெயர் கிடைத்தது. கம்பம் நகருக்குள்  யானை உலா வருவது குறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, யானையை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றன.

நாளுக்கு நாள் பல கிலோமீட்டர் கடந்து அட்டகாசம் செய்து வரும் அரிசி கொம்பன் யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கிடையில்  தேனி கம்பத்தில் அரிசிக்கொம்பன் யானை தாக்கியதில், காயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். வனப்பகுதியில் மட்டுமே சுற்றித்திரிந்த யானை முதல்முறையாக 27ம் தேதி மக்கள் வசிக்கும் கம்பம் நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சிதறி ஓடினர். அப்போது யானை பால்ராஜை தாக்கியது. காயங்களுடன் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.